top of page
Search

A Walk in the Park

பேன்டமிக் காலம் நிறைய பேருக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது.  லாக் டவுன் நேரத்தில் எல்லோரும் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம்.  அதையே தொழிலாக ஆரம்பித்தவர்களும் ஏராளம்.  நானும் ஒரு சிறிய விஷயத்தை கற்றுக் கொண்டேன்.  அதுவரை நடைபயிற்சி என்பதை  ஒரு நாளும் செய்ததில்லை.  லாக் டவுன் நேரத்தில் அலுவலகத்திற்கும் செல்ல தேவையில்லை.  வேறு எங்கும் செல்லவும் முடியவில்லை. வீட்டிலேயே எவ்வளவு நேரம் இருப்பது?


அதனால் அபார்ட்மெண்ட் மொட்டை மாடியில் நின்று கொண்டு வெளி உலகத்தை பார்க்கலாம் என்று தான் சென்றேன்.  அப்படியே நடக்க ஆரம்பித்தது,  தினமும் நடக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. அன்றிலிருந்து லாக் டவுன் காலம் முழுதும் மொட்டை மாடியில் 45 நிமிடங்கள் நடக்க ஆரம்பித்தேன்.


லாக் டவுன் தளர்ந்து அலுவலகம் திறந்தவுடன்,  அதுவும் நின்று போயிற்று.  மூன்று வருடங்கள் கழித்து விருப்ப ஓய்வு பெற்றவுடன்,  திரும்ப ஆரம்பித்தேன். அப்பொழுது தான் என் தோழி “ எதற்காக மாடியில் நடக்கிறாய்?  உன் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு சென்று நடக்கலாமே!!”  என்று கூறினாள்.  எனக்கும் அது சரி என்று தோன்றவே, அடுத்த நாள் காலை என் வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூங்காவிற்கு சென்றேன். 


My photography of the greenery at the park
My photography of the greenery at the park


அன்றுதான் முதன் முறையாக நான் சென்றது.


அங்கு  நடைப்பயிற்சி செய்வது எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை அங்கு சென்றவுடன் தான் தெரிந்து கொண்டேன்.  அடர்ந்த மரங்கள் நிரம்பிய அழகான பூங்கா.  நடப்பதற்காக நடைபாதை அழகாக போடப்பட்டிருந்தது.  ஏராளமானோர் அங்கு நடைபயிற்சி செய்து பயன் பெறுகிறார்கள். 


Pathway
Pathway

ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைப்பதை என்னால் நன்றாக உணர முடிந்தது.  விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வருகின்றனர்.  அவர்களுக்கு விளையாட நிறைய சாதனங்களும் அந்த பூங்காவில் உள்ளன.


அன்றிலிருந்து தினமும் தவறாமல் சென்று கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் நடந்து விட்டு வருவேன்.


Morning sun rays for Vit D
Morning sun rays for Vit D

போக ஆரம்பித்த சில நாட்களில் பலதரப்பட்ட மனிதர்களை பார்த்தேன். மிகவும் சீரியஸாக செல்லும் சிலர்,  அரசியல் பேசிக்கொண்டு வெட்டி அரட்டை அடித்தவாறே  போகும் சிலர்,   இயர் போன் இல்லாமல் மொபைல் போனில் சத்தமாக பாட்டு கேட்டுக் கொண்டே போகும் சிலர்,  நடந்து கொண்டே உடற்பயிற்சி செய்வதாக கைகளை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு,  அடுத்தவர் மேல் பட்டுவிடப் போகிறதே என்ற உணர்வே இல்லாமல் போகும் சிலர், கைகளை சத்தமாக தட்டிக் கொண்டே போகும் சிலர்,  என்று ரகரகமான மனிதர்கள் வருவதை பார்த்தேன்.


 அப்படித்தான் ஒரு குழுவை கவனித்தேன்.  ஒரு பத்து ஆண்கள் இருப்பார்கள்.  அவர்கள் அங்கு நடந்து செல்பவர்களைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. அவர்களில் 10 பேரும் இணையாக போக முடியாததால், ஐந்து ஐந்து பேர்களாக , முன்னும் பின்னும் இணையாக தான் செல்வார்கள்.  நடைபாதையின் அகலம் அதிகம் இல்லை.  ஆனால் இரண்டு பேர்கள் எதிரெதிராக தாராளமாக செல்லலாம்.


பொதுவாக நடந்து செல்பவர்களை பாதசாரிகள் என்று அழைக்கிறோம். நான் இவர்களுக்கு  பத்து சாரிகள் என்று பெயரிட்டுள்ளேன்.  இவர்கள் நடந்தால் எதிரில் வருபவர்கள் விலகி வழி விட வேண்டும்.  இல்லை என்றால் நம் மீது மோதி விட்டு செல்வார்கள்.  அப்படி மோதினாலும் அதைப் பற்றி சிறிதும் கண்டு கொள்ளாமல் பேசிக் கொண்டே செல்வார்கள்.  எதிரில் வருபவர்கள் பெண்களாக இருந்தாலும் அப்படித்தான் செல்வார்கள்.  நம் மீது மோதி விடுவார்களோ என்ற ஐயத்துடன்,  பெண்கள் விலகி வழி விடுவார்கள்.  நான் போகும்  சமயத்தில்தான் அவர்களும் நடைப்பயிற்சிக்கு வருவார்கள்.


நான் ஓரிரு முறை பார்த்துவிட்டு ஒரு முடிவு செய்தேன்.  அவர்கள் என் எதிரில் நடந்து வந்தால் நான் நடப்பதை நிறுத்திவிட்டு அங்கேயே சில வினாடிகள் நின்று விடுவேன்.  அப்பொழுது வேறு வழி இல்லாமல் அவர்கள் விலகி செல்வார்கள்.


ஒரு நாள் காலை  நான் நடைபயிற்சிக்கு சென்ற போது, ஒரு பெண்மணி அவர்களிடம் ஏதோ கோபமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தேன்.  அந்த பெண்மணியையும் நான் தினமும் பார்ப்பதுண்டு.  பார்க்கவே கம்பீரமாக ஒரு ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றும்.  அவர் என்ன கோபமாக பேசுகிறார் என்று அறியும் ஆவலில் அருகே சென்றேன். அந்தப் பத்து சாரி குழுவை தான் திட்டிக் கொண்டிருந்தார்.  அவர் எதற்காக திட்டுகிறார் என்று எனக்கு புரிந்து விட்டது.


அதற்குள் அந்த பூங்காவில் நடை பயிற்சிக்காக வரும் எனக்குத் தெரிந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவரும் என் அருகில் வந்து ‘என்ன ஆயிற்று?’ என்று கேட்டார்.  இப்படி ஒருவர் ஒருவராக ஒரு நான்கைந்து பேர் சேர்ந்து விட்டனர்.  அந்தப் பெண்மணியை திட்டுவதற்காக முன் வந்த பத்து சாரி குழுவின் ஒருவர்,  அவருக்கு ஆதரவாக ஒவ்வொருவராக வருவதைப் பார்த்தவுடன் வாயை மூடிக்கொண்டார்.


அந்தப் பெண்மணி “ இன்னொரு முறை இப்படி நடந்தால், எங்கு போய் புகார் கொடுக்க வேண்டுமோ அங்கு  புகார் கொடுத்து விடுவேன்”  என்று கூறியவாறே சென்றார்.


எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.  நான் எனக்காக ஒரு யுக்தி செய்து கொண்டேன்.  ஆனால் அந்த பெண்மணி எல்லோருக்காகவும் அவர்களிடம் வாதித்திருக்கிறார்.


அதற்குப் பின் நான் அந்த பத்து சாரி குழுவை பார்க்கவில்லை. நான் செல்லும் நேரத்தில் இப்பொழுதெல்லாம் அவர்கள் வருவதில்லை. 


ஏனென்றால் அந்த நேரத்தில் தான் அந்த பெண்மணியும் வருவார்.


Bonus picture of the park at night :)
Bonus picture of the park at night :)

 
 
 

3 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Hema
Mar 12
Rated 5 out of 5 stars.

Nice read

Like

Guest
Mar 12
Rated 5 out of 5 stars.

Good life

Like

Guest
Mar 12
Rated 5 out of 5 stars.

Good objection 🙏 walking is excellent exercise

Like
bottom of page